Wednesday 16 November 2011

பரமக்குடி கலவரம்


பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்த 6 மனிதர்களுக்கு அஞ்சலிகள்.
பரமக்குடியில் தலித்துகள் (பள்ளர்கள்?) 6 பேர் காட்டுமிராண்டித்தனமாக போலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது அரசு முன்னின்று நடத்தும் வன்முறை என்கிறார்கள். அரசு தரப்பில் செயல்பட்ட காவல்துறையினர் அத்தனை பேருமே தேவர்களா எனத் தெரியவில்லை. காமராஜர் காலத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கொலை வழக்கு சமயத்தில், தேவர்கள் கை ஓங்கியிருந்த பகுதிகளில் உள்ள அனைத்து காவல்துறையினரும் தலித்துகளாகவே நியமிக்கப்பட்டார்கள் என்ற ஒரு பேச்சு உண்டு. உண்மையா எனத் தெரியவில்லை. இதற்கு ஆதாரம் உண்டு என்று ஒரு தரப்பும், இது காமராஜர் மீது சேற்றை வாரி இறைக்கும் உத்தி, இதற்கு ஆதாரமே கிடையாது என்றும் ஒரு தரப்பும், எப்போதும் போல் இரண்டு தரப்புகளாக மாறி அடித்துக்கொள்ளும். யாராவது உண்மை நிலை என்ன என நிரூபித்தால்தான் உண்டு.
பள்ளர்கள் தேவர்கள் இடையிலான மோதல் என்றாலும், இதனை தலித் மற்றும் தேவர்களுக்கு இடையேயான மோதலாகவே பார்க்கவேண்டியுள்ளது. தேவர்களில் படித்தவர்கள் யாரும் முன் வந்து தாங்கள் இச்செய்கையைக் கண்டிக்கிறேன், இது கேவலம், இதைச் சொல்வது இப்படிக்கு இப்படியான தேவர் என்று சொன்னதாகத் தெரியவில்லை. படிப்புதான் எல்லாவற்றையும் மாற்றும் என்றால், ஏன் படித்த தேவர்கள் கூட தாங்களே முன்வந்து இந்த கேவலமான காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிக்காமல் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அந்த அளவுக்கு என்ன வெறுப்பு மண்டிக் கிடக்கிறது என்பது புதிர்தான். முத்துராமலிங்கத் தேவர் தவறவிட்ட அந்த முக்கியமான வரலாற்று சாத்தியங்களே காரணமாக இருக்கவேண்டும்.
இந்த மோதலின் உடனடிப் புள்ளியாக ஒரு பள்ளிச் சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் இருக்கிறது. எல்லா கலவரங்களுக்குமே இப்படி ஒரு கொடுமையான தொடக்கப்புள்ளி இருந்துவிடுகிறது. அதுவரை அமுக்கி வைக்கப்பட்டிருந்த கோரங்கள் எல்லாம் இப்படிப்பட்ட ஏதேனும் ஒரு உடனடிக்காரணம் கிடைத்ததும் உடைத்துக்கொண்டு வெளி வந்துவிடுகிறது. அந்தப் பையன் கொல்லப்பட்டதற்கு ‘தெய்வத் திருமகன் இம்மானுவேல் சேகரன்’ என்று எழுதி வைத்ததாகச் சொல்கிறார்கள். பட்டப் பெயர் இல்லாமல் தமிழனால் இயங்கமுடியாது என்னும் உள்மனம் இதில் துலங்கப் பார்க்கலாம். ஒரு தமிழனுக்கு கொடுக்கப்பட்ட பெயரை இன்னொரு தமிழன் பயன்படுத்தக்கூடாது என்பது எழுதி வைக்கப்படாத விதி. ஒரு ஜெண்டில் மேன் அக்ரீமெண்ட் போல. இங்கே அது மீறப்பட்டிருக்கிறது. (இதுவும் உண்மையா எனத் தெரியவில்லை. பத்திரிகைகள் தரும் செய்திகளை வைத்தே இதனைச் சொல்ல வேண்டியிருக்கிறது.) தமிழ்ப் பொருளை முன்வைத்துப் பார்த்தால் இதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் நம் (கேடுகெட்ட) பழக்க வழக்கங்களை முன்வைத்துப் பார்த்தால் தெய்வத் திருமகன் என்ற பெயரை இன்னொரு தலித் தலைவருக்கு விளிக்காமல் இருந்திருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. இதன் பலன் ஆறு பேர் கொல்லப்பட்டது மற்றும் ஒரு சிறுவனின் உயிரழப்பு என்னும்போது இதனைத் தவிர்த்திருந்திருக்கலாம் என்றே ஆழ்மனம் விரும்புகிறது.
இதில் போலிஸார் இத்தனை கடுமையாக நடந்துகொண்டிருக்க வேண்டியதில்லை. குருபூஜை நேரத்தில் இதைவிட பெரிய பதட்டத்துடன் நடைபெறுவதைப் பார்க்கிறோம். அங்கே இதுவரை துப்பாக்கிச்சூடுகள் நிகழ்ந்ததில்லை. தலித்துகள் கூட்டத்தில் இந்த முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. உண்மையில் ஆழ்மனத்துள் உறங்கிக்கிடக்கும் தலித்துகள் மீதான காழ்ப்பு வெளிவந்துவிடுகிறது போல. சட்டத்தைக் காப்பாற்ற, பொது மக்களின் அமைதியைக் கடைப்பிடிக்க என்றால், இரு தரப்பும் வரம்பு மீறும்போது சட்டம் ஒரே போலத்தான் செயல்படவேண்டும். இங்கே அப்படி நடப்பதில்லை.
இதே போல் திருநெல்வேலியில் 17 தலித்துகள் கொல்லப்பட்டார்கள்.
இதைச் சொல்லும்போது இன்னொன்றையும் சொல்லவேண்டியிருக்கிறது. அது கூட்ட வன்முறை குறித்து. ஒரு கூட்டமாகச் சேரும்போது தங்களை இழந்துவிடுகிறார்கள் அக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் இதுகாறும் நடந்துள்ள பெரிய பெரிய கலவரங்களுக்கெல்லாமே இந்தக் கும்பல் மனநிலை காரணமாக இருப்பதைப் பார்க்கலாம். அதுவரை மனத்தில் இருக்கும் மிருகத்தை அடக்கிவைக்கும் மனிதத் திரை மெல்லக் கிழிந்து மிருகம் வெளிக்குதிக்கும் தருணமது. அப்போது நடப்பது எதுவுமே அறிவுக்குப் பொருத்தமானதாக இருக்கவே முடியாது. இந்தக் கூட்ட வன்முறையும் இதையே செய்கிறது. அங்கே அவர்களை அடக்கக் காத்திருக்கும் காவல்துறையைத் தங்கள் ஒரே எதிரியாகப் பார்க்கிறது. அந்த இடத்தில் பெண் போலிஸ் இருந்தால் கூட்ட வன்முறை எவ்வித யோசனையும் இன்றி பாலியல் மீறல்களில் இறங்குகிறது.
திருநெல்வேலியில் 17 பேர் கொல்லப்பட்ட சமயத்திலும் இப்படி பெண் போலிஸுக்கான கொடுமைகளைக் கண்ணால் பார்த்த பலர் உண்டு. (ஒரு நண்பர் கேட்டார், அதெப்படி தலித்துகள் கூட்டம் நடத்தும் இடங்களுக்கெல்லாம், அங்கே கலவரம் வர வாய்ப்பிருக்கிறது என்று தெரிந்தும், சரியாக பெண் போலிஸார்கள் போய் நிற்கிறார்கள் என்று. சரியான, முக்கியமான கேள்விதான்!) அப்படி நடக்கும்போதும் போலிஸ் எவ்விதப் பதட்டமும் கொள்ளாமல் கூட்டத்தை சமாளிக்கவேண்டும் என்று இப்போது சொல்வது எளிது. அந்நேரத்தில் கடைப்பிடிப்பது கடினம். எனவேதான் போலிஸ் இன்னொரு கூட்ட வன்முறையைக் கைக்கொண்டுவிடுகிறார்கள். இதில் சொல்லி வைத்ததுபோல எந்த அரசியல் தலைவரும் செத்துவிடுவதில்லை என்று பார்க்கலாம். அன்று முதல் இன்று வரை. ஆனால் இதன் காரணங்கள், எப்படி நிகழ்ந்தது, என்ன மாதிரி சூழ்நிலையில் நிகழ்ந்தது என்பதெல்லாம் மறக்கப்பட்டு, ஒரே வரியில் இது தியாகமாகவோ அத்துமீறலாகவோ பதிவாகிவிடுகிறது. இதன் பல பரிமாணங்கள், இந்த ஒற்றை நோக்கில் அடிபட்டுப் போய் ஏதேனும் ஒரு சாதிக்கு ஆதரவாகவும், இன்னொரு சாதிக்கு ஆயுள் முழுக்க சுமக்கவேண்டிய சுமையாகவும் மாறிப் போய்விடுகிறது. இதுவும் நம் பழக்கம் நமக்குத் தந்திருக்கும் தண்டனையே.
கூட்ட மனநிலை என்னும் உணர்ச்சியை மிக நன்றாகவே அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சமூக விரோதிகளும் பயன்படுத்திக்கொண்டு விடுகிறார்கள். தலித்துகளுக்கும் ஹிந்து மேல் சாதிகளுக்கும் இடையேயான தொடர் மோதலுக்கு வரலாற்றில் தலித்துகள் பட்ட (பட்டுக்கொண்டிருக்கும்) கஷ்டத்துக்கும் கேவலத்துக்கும் ஒரு பெரிய காரணம் உண்டு எனபதை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த ரணம் ஆறிவிடக்கூடாது என்பதில் மற்ற மதங்களின் என்ன பங்கு என்பதையும் யோசிக்கவேண்டும். இம்மானுவேல் சேகரன், ஜான் பாண்டியன் என்ற பெயர்கள் சொல்வது என்ன என்றும் யோசிக்கவேண்டும். அம்பேத்கர் சிலையையே நீக்கத் துணிந்த திருமாவளவன், அப்படி முடிவெடுத்தது இஸ்லாமியர்களுக்காகத்தான் என்பதும் நினைவுக்கு வருகிறது.
இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி தினத்தில் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருப்பது, ஏன் பெரிய அளவுக்கு மக்கள் எதிர்ப்பைப் பெறவில்லை என்றால், அதன் காரணம், இக்கலவரம் நிகழ்ந்ததன் காரணம் ஜான்பாண்டியன் கைதுக்காக என்பதே. ஜான் பாண்டியனை நம் வெகுஜன மக்கள் ஒரு தலைவராகப் பார்க்கவில்லை. அரசியல் அடியாள் போலவே பார்க்கிறார்கள். இதனால் பலர் மனத்துக்குள்ளேயே ஒரு நீதிமன்றம் செயல்பட்டு, ரௌடித்தனத்துக்கு கிடைக்கும் விடைதான் இது என்ற ஆழமற்ற நீதி ஒன்று உருவாகிவிடுகிறது. திரைப்படங்கள் பார்த்து உடனடி நீதியை ஹீரோயிஸமாக நினைக்கும் மக்கள் இப்படித்தான் யோசிப்பார்கள். கொஞ்சம் ஆழமாக யோசித்தாலும், இந்தப் படுகொலை என்பது எல்லாருக்குமான அச்சுறுத்தல் என்பது அவர்களுக்குப் புரியும். அதேபோல் தலித்துகளுக்கும் தங்கள் தலைவர்களின் தகுதிகள் என்னவாக இருக்கவேண்டும் என்பதும் இப்போது புரிந்திருக்க வேண்டும். தலித் தலைவர்கள் என்று தங்களை அறிவித்துக்கொள்பவர்கள் அறிந்துகொள்ளவேண்டிய விஷயங்களும் நிறைய உள்ளன. தலித்துகள் ஜாதி ஹிந்துக்களுக்கு எதிராகப் போராட, முதலில் தலித்துகளுக்குள்ளே இருக்கும் சமநிலையின்மையை நீக்கவேண்டும். அருந்ததியர், பள்ளர், பறையர் உள்ளிட்ட தலித் மக்களிடையே எழப்போகும் ஒற்றுமையே உயர்த்தப்பட்ட சாதிகளின் அராஜகங்களுக்கு எதிரான வலுவான பதில். வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது என்பதை நம் அரசியல்வாதிகளிடமும் நம் மக்களிடமும் நாம் எப்போதுமே பார்க்கமுடியாது. இப்போதும் நாம் பாடம் கற்றுக்கொள்வோம் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

No comments:

Post a Comment